வரலாறு - 'நிமிடங்களில் கற்போம்!' - பகுதி-1

0
பாடம்: இந்திய வரலாறு
பிரிவு: பண்டைய இந்திய வரலாறு 
             (History of Ancient India)
பயன்: தமிழ்நாடு அரசு போட்டித் 
            தேர்வுகள் பலவற்றிற்கும் & 
            இந்திய அரசு போட்டித் தேர்வுகள் 
            சிலவற்றிற்கும்...

இயல் 1 - வரலாற்றுக்கு முந்தைய கால 
                   இந்தியா (India - Pre Historic Period)

இந்தியாவில், வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு, எழுத்து ஆதாரங்கள் அல்லது எழுத்து வடிவ சான்றுகள் கிடைக்கவில்லை. அகழ்வாராய்ச்சியின் (Archaeology) மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ள கற்கருவிகள், மண்பாண்டங்கள், மண்பாண்ட ஓடுகள், கலைப்பொருட்கள், உலோகக் கருவிகள் போன்ற பொருட்களை கொண்டு, முந்தைய காலத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

இந்தியாவின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தை ஐந்து வகையாகப் பிரிக்கலாம்.

1) பழைய கற்காலம் - 
    கி.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பு

2) இடைக்கற்காலம் - 
    கி.மு. 10,000 முதல் கி.மு. 6,000

3) புதிய கற்காலம் - 
    கி.மு. 6,000 முதல் கி.மு. 4,000

4) தாமிர கற்காலம் - 
    கி.மு. 4,000 முதல் கி.மு. 1500

5) உலோகக் கற்காலம் - 
    கி.மு. 1,500 முதல் கி.மு. 600

அறிவியலின் துணைகொண்டு, இந்திய துணைக்கண்டத்தின் 'வரலாற்றுக்கு முந்தைய காலம்' வரையறுக்கப்படுகிறது.

வரலாற்றுக்கு முந்தைய காலத்தை வரையறுக்க பொதுவாக பயன்படுத்தப்படும் அறிவியல் முறைகள்:-

1) ரேடியோ கார்பன் முறை
2) டென்ட்ரோ காலக்கணிப்பு முறை


1) 'ரேடியோ கார்பன்' முறை:

இது ஒரு தொழில்நுட்ப முறை ஆகும்.

ரேடியோ கார்பன் தொழில்நுட்ப முறையானது, 'வில்லார்டு லிப்பி' என்பவரால் 1949-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

வில்லார்டு லிப்பி, 1960-ஆம் ஆண்டு வேதியியல் துறையில் நோபல் பரிசு பெற்றார்.

ரேடியோ ஐசோடோப்பு கார்பன் 14-ன் (C-14) அரை ஆயுட்காலம் 5,730 ஆண்டுகள்.

குறிப்பிட்ட காலத்திற்குப் பின், உயிர் சார்ந்த பொருட்களில் எந்த அளவிற்கு கரியம் குறைந்துள்ளது என்பதன் அடிப்படையில், காலத்தைக் கணக்கிடும் முறையே 'ரேடியோ கார்பன்' முறை ஆகும்.

2) 'டென்ட்ரோ காலக்கணிப்பு' முறை:

மரத்தின் உள் வெட்டுப் பகுதியில் காணப்படும் வளையங்களின் எண்ணிக்கையைக் கொண்டு காலத்தை கணக்கிடும் முறை 'டென்ட்ரோ காலக்கணிப்பு' முறை எனப்படுகிறது.

உதாரணமாக, வெட்டப்பட்ட ஒரு மரத்தின் உள் வெட்டுப் பகுதியில் உள்ள வளையங்களின் எண்ணிக்கை 15 எனில், அந்த மரத்தின் வயது 15 எனலாம். அதாவது, அந்த மரம் நடப்பட்டு 15 வருடங்கள் ஆகிறது என அறியலாம்.


பழைய கற்காலம் 
(Paleolithic or Old Stone Age):-

பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாடியும், உண்ணக் கூடிய வகையிலான தாவரங்கள் மற்றும் கிழங்குகள் போன்றவற்றை சேகரித்து உணவாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். இவர்கள், 'உணவை சேகரிப்போர்' (Food Gathers) என்று அழைக்கப்படுகின்றனர்.

விலங்குகளை வேட்டையாடுவதற்கு கற்கருவிகளை பயன்படுத்தினர்.

பழைய கற்கால மக்களின் ஆயுதங்கள்: கையளவு கற்கருவி மற்றும் உடைந்த கூழாங்கற்கள்

கற்கருவிகள், 'குவாட்சைட்' எனப்படும் பாறைக் கற்களால் ஆனவை.

இந்தியாவில், பழைய கற்கால கருவிகள் கிடைக்கப் பெற்றுள்ள இடங்கள்:

i) வடமேற்கு இந்தியாவில்- சோன் பள்ளத்தாக்கு மற்றும் பெட்வா பீடபூமி.
ii) வட இந்தியாவில்- இமயமலையில் உள்ள சிவாலிக் குன்றுகள். 
iii) மத்தியப் பிரதேசத்தில்- சோன் ஆற்றுப் படுகை, பிம்பேட்கா.
iv) நர்மதை பள்ளத்தாக்கில், ஆதம்கார் குன்று.
v) ஆந்திரப் பிரதசத்தில்- கர்நூல் குகைகள், ரேணிகுண்டா.
vi) தமிழ்நாட்டில்,சென்னைக்கு அருகாமையில் உள்ள அத்திரம்பாக்கம் மற்றும் வட மதுரை.

இடைக்கற்காலம் 
(Mesolithic or Middle Stone Age):-

பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் 'இடைக்கற்காலம்' ஆகும்.

இடைக்கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள், குஜராத் மாநிலத்தில் உள்ள லாங்கன்ச், மத்திய பிரதேசத்தில் ஆதம்கார், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இடைக்கால கற்கருவிகள் மிகச்சிறியவை மற்றும் அதிகபட்சம் ஐந்து சென்டிமீட்டர் அளவுடையவை. எனவே, இடைக்கால கற்கருவிகளை நுண்கருவி அல்லது மைக்ரோலித் என்று அழைக்கிறோம்.

வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் ஆகிய செயல்முறைகளை தொடர்ந்தனர். பெரிய விலங்குகளுக்கு பதிலாக மான், முயல், பன்றி போன்ற சிறிய விலங்குகளை வேட்டையாடினர்.

வேட்டையாடுவதற்காக, வில் மற்றும் அம்புகளை பயன்படுத்தினர்.

ஒரே இடத்தில் நீண்ட காலம் தங்கி வாழ்ந்தனர்.

விலங்குகளை வளர்த்தல், தோட்டப் பயிரிடுதல், தொடக்க கால வேளாண்மை போன்ற செயல்முறைகள் தொடங்கியது.

இறந்தவர்களை புதைக்கும் முறை இக்காலத்தில் தோன்றியதாக கருதப்படுகிறது. 
ஒரு சில இடங்களில், நுண்கருவிகள் மற்றும் மேலோடுகளுடன் சேர்த்து இறந்தவர்களை அடக்கம் செய்யப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

புதிய கற்காலம் 
(Neolithic or New Stone Age):-

புதிய கற்கால சான்றுகள், இந்தியாவின் பல பகுதிகளில் கிடைத்துள்ளன. 

புதிய கற்கால பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடங்கள்: காஷ்மீர் பள்ளத்தாக்கு, சிராந்த் (பீகார்), உத்திரப்பிரதேசத்தில் போலான் சமவெளி, தக்காணம் உள்ளிட்டவை.

குறிப்பிடத்தக்க இடங்கள்: கர்நாடகத்தில் மாஸ்கி, பிரம்மகிரி, ஹல்லூர், கோடேகல்
தமிழ்நாட்டில் பையம்பள்ளி
ஆந்திரப்பிரதேசத்தில் உட்னூர்

சிறப்புக் கூறுகள்: கற்கருவிகளை பளபளப்பாக்குதல், மண்பாண்டம் செய்தல், சக்கரம் கண்டுபிடிப்பு போன்றவை.

தாவரங்களைப் பயிரிட்டதாலும், விலங்குகளை வளர்த்ததாலும் புதிய கற்கால மக்கள் ஓரிடத்தில் தங்கி வாழ்ந்தனர். இது கிராம சமுதாயம் உருவாக வழிவகுத்தது.

புதிய கற்கால மண்பாண்டங்கள் கிடைத்துள்ள இடங்கள்: திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி.

இறந்தவர்களை புதைக்கும்போது, அவர்களுடன் பழகிய விலங்குகளையும் சேர்த்து, வீட்டு முற்றத்திலேயே புதைக்கும் பழக்கம் இருந்தது.

இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு பெரிய மண்பாண்ட தாழிகள் பயன்படுத்தப்பட்டது.

மண்பாண்டங்கள் செய்வதற்கு சக்கரம் பயன்படுத்தப்பட்டது.

சமைப்பதற்கும், தானியங்களை சேமித்து வைக்கவும் மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டன.

வேளாண்மையில் பயிரிடுவதற்கும், போக்குவரத்துக்கும் கால்நடைகள் பயன்படுத்தப்பட்டன. 

புதிய கற்கால மக்கள், பருத்தி மற்றும் கம்பளி ஆடைகளை அணிந்தனர்.

உலோக காலம் (Metal Age):-

உலோக காலமானது,  
i) செம்பு காலம் (Copper Age)  
ii) வெண்கல காலம் (Bronze Age)  
iii) இரும்பு காலம் (Iron Age) 
என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.

புதிய கற்காலத்தை தொடர்ந்து வந்த காலம், 'செம்பு காலம்' எனப்படுகிறது. 

இக்காலத்தில், செம்பு மற்றும் வெண்கலம் ஆகிய உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன.
கற்கருவிகளும் பயன்பாட்டில் இருந்துள்ளது.

செம்பு - கற்கால பயன்பாடுகள் பொதுவாக, ஆற்றங்கரைகளில் வளர்ச்சியடைந்தன.
ஹரப்பா பண்பாடு செம்பு - கற்கால பண்பாட்டின் ஒரு பகுதியாகும்.

வெண்கலம் மற்றும் செம்பு ஆகியவற்றால் ஆன பொருட்கள், மண்பாண்டங்கள், சுடுமண் உருவங்கள் போன்றவை தமிழ்நாட்டில் உள்ள பையம்பள்ளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

செம்பு காலத்தை தொடர்ந்து 'இரும்பு காலம்' தோன்றியது. 

தென்னிந்தியாவில், இரும்பு காலம் (Iron Age) மற்றும் பெருங்கல் காலம் (Megalithic) ஆகிய இரண்டும் 'சம காலம்' என கருதப்படுகிறது.

'மெகாலித்' (Megalith) என்னும் வார்த்தைக்கு, 'பெரிய கல்' என்று பொருள்.

கல்லறையின் மேல் சுற்றி அடுக்கப்பட்ட கற்கள், பெருங்கல் என குறிக்கப்படுகிறது. இந்த வகை கல்லறைகள் தென்னிந்தியாவில் அதிகமாக கிடைத்துள்ளன. 

தாமிர காலம் (Copper Age):-

தாமிர காலத்தில் முதன்முதலில் வண்ணம் பூசப்பட்ட மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டன.


* குறிப்பு: இது, கற்பதை கற்பிக்கும் நோக்கத்தில் தொகுக்கப்பட்டது.

* பிழை / சந்தேகம் / கருத்து இருப்பின், 
மின்னஞ்சல் முகவரிக்கு, தகவல் அனுப்பவும்.

என்றென்றும் சேவையில்...
மதிராஜா திலகர்

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top